கலைஞர் கருணாநிதி பல விமர்சனங்களுக்கு ஆளானாலும், உத்தமருக்கு உதாரணமாக இல்லாவிட்டாலும், என் சம காலத்தில் வாழ்ந்து மறைந்த பெரும் தலைவர் என்ற முறையில், அவர் வாழ்க்கை எண்ணில் பதித்த சுவடுகளை பகிர்வது என் கடமையாகும்.
சமூக நீதி
தன் தலைவர் பெரியாரின் பல்வேறு கொள்கைகளை அரசியல் சட்டம் மூலம் மக்களிடத்தில் கொண்டு சேர்த்த பெருமை அவருக்குண்டு. சமத்துவபுரம், பெண்களுக்கு சொத்துரிமை, கலப்பு மணத்திற்கு சன்மானம், அனைவருக்கும் அர்ச்சகராகும் உரிமை, கல்வி, வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு, பெண்கள், கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை என்பன சில.
இவை காலத்தின் கட்டாயமாக பிற அரசுகளாலும் பின்பற்றப்பட்டதனால் தான், தமிழகம் இன்றும் சரிவிகித வளர்ச்சியில் முன்னோடியாய் இருக்கின்றது.
இன்று அமெரிக்காவில் பேசப்படும் பாலின, கறுப்பின சமத்துவம், தமிழ்நாட்டில் நடைமுறையாக உள்ளதற்கு கலைஞரும் ஒரு முக்கிய காரணம்.
தமிழ் பற்று
ஒரு செம்மொழிக்கு அரசு ஆதரவு மிக அவசியமானது. அவரின் தமிழ் படைப்புகளும், தமிழ் மாநாடுகளும், தமிழ் கல்வி வளர்ச்சி முயற்சிகளும், குமரி வள்ளுவரின் சிலையும் என்றும் நினைவு கூற தக்கவை.
தொலை நோக்கு திட்டங்கள்
பல திட்டங்கள் அரசியல் நோக்கோடு செயல்படுத்தப்பட்டாலும், இந்தியாவிலேயே அதிக சாலை இணைப்பு கொண்டது, அதிக மருத்துவ சேவை உள்ளது, அதிக சிறு வணிக தொழிற்சாலைகள் (small scale industries), பல வெளிநாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், அதிக உயர்கல்வி நிறுவனங்கள் என தமிழகம் பெருமை கொள்ள மிக முக்கிய காரணி கலைஞர்
அவரின் பல சுயநல செயல்களை, அதன் விளைவுகளையும் சாடியதுண்டு. நான் அவரின் ரசிகன் மட்டுமே, அவர் கட்சியின் அனுதாபி இல்லை.
வெகு நாட்கள் வாழ்ந்த தலைவர்களுக்கு பெருமையை விட, குற்றங்களே அதிகம் வெளிப்படும். அப்படி இருந்தும் காலத்தினால் அவர்களின் பெருமை சிறப்புறும். கலைஞருக்கும் அவ்வாறே அமையும் என நம்புகிறேன்.